தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!
கரூர் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் பலியான சம்பவத்தில் கைதான மாவட்ட செயலர் மதியழகன், மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் இருவரும் கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலர் மதியழகனை கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த கூடலூரில் கைது செய்தனர்.
அவரைத் தொடர்ந்து அவருக்கு அடைக்கலம் கொடுத்த மாநகர நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் கரூர் நகர காவல் நிலையத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை இருவரையும் கரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.