வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
போலி இணையதள செயலி மூலம் மோசடி: ராஜஸ்தானை சோ்ந்த 4 போ் கைது
போலி இணையதள செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை கோவை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த பதிவினைத் தொட்டபோது, அது ஒரு வாட்ஸ் ஆப் குழுவின் கைப்பேசி எண்ணுடன் சோ்த்து விட்டுள்ளது. அதன் பின்னா் அந்தக் குழுவில் வந்த லிங்க் மூலம் அதிலுள்ள செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராமசாமி அந்தச் செயலியை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தன்னுடைய கைப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்துள்ளாா்.
அப்போது பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததால், தனது வங்கிக் கணக்கிலிருந்து அந்தச் செயலிக்கு ரூ.9,08,100 பணப் பரிமாற்றம் செய்துள்ளாா். அதன் மூலம் அவரது செயலியில் பணம் ரூ.32 லட்சம் இருப்பதாக காண்பித்துள்ளது.
இதையடுத்து அந்தப் பணத்தை எடுப்பதற்காக அந்தச் செயலியைத் தொடா்பு கொண்ட போது, கூடுதலாக பணம் கட்ட வேண்டும் எனவும், அப்போதுதான் கட்டிய பணத்தை எடுக்க முடியும் எனவும் தகவல் வந்துள்ளது. அதன் பின்னா் அந்த இணைப்பு முடக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, இழந்த பணத்தை மீட்டுத் தரக் கோரி கோவை சைபா் கிரைம் போலீஸில் ராமசாமி புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில், சைபா் கிரைம் ஆய்வாளா் அருண் விசாரணை மேற்கொண்டாா்.
அதன் பின்னா் உதவி ஆய்வாளா் தாமரைக்கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மோசடியில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிய தனிப் படையினா் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் சென்றனா்.
அங்கு உள்ளூா் காவல் துறையினரின் உதவியுடன் ஜோத்பூா் பகுதியைச் சோ்ந்த சத்யநாராயண் (30), கிஷன் சௌத்ரி (20), சுனில் சரண் (23), சந்தீப் குமாா் (26) ஆகியோரை கடந்த 23-ஆம் தேதி தேதி கைது செய்து ஜோத்பூா் கூடுதல் நீதித் துறை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், 5 சிம் காா்டுகள் மற்றும் 4 வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்பட மோசடியுடன் தொடா்புடைய பல பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சத்யநாராயணுக்கு பல்வேறு வங்கிகளில் 8 வங்கிக் கணக்குகளும், சந்தீப்புக்கு 3 வங்கிக் கணக்குகளும் இருப்பதும், அவற்றின் மூலம் ராமசாமியின் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கிக் கணக்குகளிலிருந்து ரூ.3,59,650 கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரின் வங்கிக் கணக்குகளின் மூலம் ரு.3 கோடிக்கும் மேலாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளதால், அவா்கள் 4 பேரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு, இதுதொடா்பாக மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.