வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ர...
வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்
வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி மிகப் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்தச் சம்பவத்தில், 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கும், சேதமடைந்த கட்டமைப்புகளின் மறுசீரமைப்புக்கும், மத்திய அரசு ரு.260.65 கோடி நிதியுதவி வழங்க அனுமதித்துள்ள நிலையில், இதுவரையில் அந்த நிதி மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை என கேரள சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று (செப். 30) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய முதல்வர் விஜயன் கூறியதாவது:
“மாநில அரசு மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்புக்கு ரூ.2,262 கோடி மத்திய அரசிடம் கோரியது. பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோரிடம் உரையாடினர்.
இந்த நிலையில், மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்கு ரூ.260.65 கோடி நிதியை ஒதுக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அந்தத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என அவர் கூறியுள்ளார்.
இத்துடன், வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டுமெனவும், முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!