ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!
ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் வீர் ஷர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தனது சகோதரருடன் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தபோது மின்பழுது காரணமாக திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது.
தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியரான இவரின் தந்தை, சம்பவத்தின்போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றுள்ளார். இவரின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.
வீட்டில் வீர் ஷர்மா தனது சகோதரருடன் தனியாக இருந்தபோது நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து நேர்ந்துள்ளது. சன்னல் வழியாகப் புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு உள்ளே மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள அவரின் தாயார் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தின் விருப்பப்படி, சிறுவர்களின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
சோனியில் ஒளிபரப்பாகிவரும் ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மா. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.
இவரின் சகோதரர் செளர்யா, பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதியிருந்தார்.
இதையும் படிக்க | 26 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பாகிறது சித்தி தொடர்!