வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ர...
காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?
காஸாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில், பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள நிலையில், காஸாவில் செயல்படும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் ஒத்துழைக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
இத்துடன், சர்வதேச அளவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு அலை அதிகரித்துள்ள நிலையில், போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு உடனடியாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் காஸாவினுள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் காஸாவின் வாழ்வியலை மறுசீரமைக்க; ஹமாஸ் சரணடைய வேண்டும், பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தை நேற்று (செப். 29) முன்மொழிந்துள்ளார். அதற்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஆதரவளித்துள்ளார்.
ஆனால், இந்தத் திட்டத்தை ஹமாஸ் படைகள் ஏற்க மறுத்தால் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் காஸாவின் மீதான தாக்குதல்களை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், ஹமாஸ் ஏற்றுக்கொண்டால் அமைதித் திட்டம் குறித்து கொடுக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா எனும் சந்தேகமும் உருவாகியுள்ளது.
இதுபற்றி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அமைதித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:
போர்நிறுத்தம்!
இந்தத் திட்டத்தின் மூலம், ஹமாஸ் - இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்படும். 72 மணி நேரத்திற்குள் ஹமாஸ் படைகளின் கட்டுப்பாட்டில் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளும் விடுதலைச் செய்யப்பட வேண்டும்.
இதற்கு பதிலாக, இஸ்ரேலின் சிறைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 250 பாலஸ்தீனர்களும், போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் கைது செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 1,700 பாலஸ்தீன மக்களும் விடுவிக்கப்படுவார்கள்.
மேலும், ஹமாஸ் ஒப்படைக்கும் உயிரிழந்த இஸ்ரேலிய பிணைக் கைதிகள் ஒவ்வொருவரின் உடலுக்கு நிகராகவும் பலியான 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்கும்.
படைகள் வெளியேற்றம்:
காஸாவில் இருந்து இஸ்ரேலின் படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படும். ஆனால், அதற்கு ஹமாஸ் படைகள் சரணடையே வேண்டும். பின்னர், இஸ்ரேலிய படைகளுக்கு பதிலாக சர்வதேச பாதுகாப்புப் படைகள் அங்கு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும்.
போருக்கு பின் ஹமாஸின் நிலை!
காஸாவின் நிர்வாகத்தில் ஹமாஸ் படைகளுக்கு எந்தவொரு பங்கும் கிடையாது. அவர்களது, சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் அனைத்தும் தகர்க்கப்படும். அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஹமாஸ் படையினருக்கு மன்னிப்பு வழங்கப்படும். காஸாவில் இருந்து வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
ஹமாஸ் படைகளின் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதை சர்வதேச பாதுகாப்புப் படைகள் உறுதி செய்யும். மேலும், பாலஸ்தீன காவல் துறையினருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். காஸாவில் பணிகள் மேற்கொள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன போலீஸாருக்கு பயிற்சி அளிப்பதாக எகிப்து அரசு உறுதியளித்துள்ளது.
இதேவேளையில், காஸாவினுள் அதிகப்படியான மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்படும். நடுநிலையான ஐ.நா. மற்றும் செம்பிறை உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமே பெரும்பாலும் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், பெரும் சர்ச்சைக்குரிய அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அரசுகளின் ஆதரவில் இயங்கி வரும் உணவு வழங்கும் நிறுவனங்கள் செயல்படுமா என்பது தெளிவாகவில்லை.
இத்துடன், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் எனவும், அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அரசு காஸாவை மிகப் பெரிய ரியல் எஸ்டேட் பகுதியெனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே, எப்போது வேண்டுமானாலும் பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.
காஸாவில் இடைக்கால நிர்வாகத்தை, பாலஸ்தீன அதிகாரிகளே நிர்வாகம் செய்வார்கள். ஆனால், “போர்ட் ஆஃப் பீஸ்” (அமைதி வாரியம்) எனும் அமைப்பு மேற்பார்வையில் ஈடுபடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், காஸாவின் மறுக்கட்டமைப்புக்கான நிதியை இந்த அமைப்பே கட்டுப்படுத்தும் என்பதால், காஸா பகுதியின் மீது அவர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலஸ்தீன அதிகாரம் மற்றும் தனி நாடு அங்கீகாரம்!
காஸாவின் இடைக்கால நிர்வாகத்தின்போது, பாலஸ்தீன அதிகாரத்துவத்தில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் விரைவில் காஸாவில் பாலஸ்தீனர்கள் தலைமையில் ஆட்சி அமையும் என உறுதியளிக்கப்படுகிறது.
அதிபர் டிரம்ப்பின் இந்த அமைதித் திட்டத்தின் அம்சங்களை கத்தார் மற்றும் எகிப்து அதிகாரிகள் ஹமாஸ் படைகளிடம் நேற்று (செப். 27) மாலை வழங்கியுள்ளனர். இதனை, தங்களது தலைவர்களுடன் ஆலோசித்த பின்பு முறையான பதிலகள் வழங்கப்படும் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தங்களது நிலங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், உரிமையும் தங்களுக்கு உள்ளதெனக் கூறும் ஹமாஸ் படைகள் சரணடை மறுத்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்க அதிபரின் இந்தத் திட்டத்திற்கு எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்தத் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அவரது அரசின் அமைச்சர்கள் மற்றும் கூட்டணித் தலைவர்களிடம் இருந்தே பெரும் எதிர்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், காஸாவை முழுவதுமாக ஆக்கிரமித்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், அமைதித் திட்டத்துக்கு ஆதரவளித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது வெற்றிகரமாக நடைமுறைப் படுத்த முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காந்தியும் மோடியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்!லண்டனில் காந்தி சிலை மீது பெயிண்ட் வீச்சு!