வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து புதிய வரலாறு படைத்த நேபாளம்!
டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து நேபாள அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணி டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
கத்துக்குட்டி அணி எனக் கருதப்படும் நேபாள அணி, இந்தத் தொடரின் முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்திருந்தது.
இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நேபாள கேப்டன் ரோஹித் பவுடல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷெய்க் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 68 ரன்களும், சந்தீப் ஜா 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் அக்கீல் ஹொசைன் மற்றும் கைல் மையர்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேபாளத்தின் பந்துவீச்சில் சிக்கி சின்னாப்பின்னமானது. முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 17. 1 ஓவர்களில் வெறும் 83 ரன்களில் சுருண்டது. இதன்மூலம், நேபாள அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 21 ரன்களும், அக்கீம் 17 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
நேபாள அணியில் முகமது ஆதில் ஆலம் 4 விக்கெட்டுகளும், குஷல் புர்தேல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்த தொடரை நேபாள அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பைத் தொடர் உள்பட 29 டி20 தொடர்களில் விளையாடியுள்ள நேபாள அணி இதுவரை 5 தொடர்களை வென்றுள்ளது. அதில், முழு உறுப்பினர் தகுதிபெற்ற அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.