வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
``விஜய்க்கு இயற்கையாகவே கூட்டம் கூடுகிறது, அதனால்'' - துரைவைகோ சொன்ன அறிவுரை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது.
அரசியல், ஆன்மீக மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தாலும் காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்குழு அமைத்துள்ளது.
சிலர் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்கின்றனர், நீதிமன்றமும் இதனை விசாரிக்க உள்ளது. நீதிமன்ற விசாரணை, சி.பி.ஐ விசாரணை அல்லது மாநில அரசு அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் மூலமாகவும் சில உண்மைகள் தெரிய வரலாம்.

விசாரணை முடிந்த பிறகு அதில் கூறப்படும் காரணங்களை வைத்து யார் மீது தவறு என்பதை கூறலாம். அதற்கு முன்பாக அவர்களா இவர்களா என்று யாராலும் சொல்ல முடியாது.
அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த ஏற்கனவே விதிமுறைகள் உள்ளன. அரசு புதிதாக விதிமுறைகளை வகுத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு கொண்டுவரும் அனைத்து விதிமுறைகளுக்கும் எல்லோரும் கட்டுப்பட வேண்டும். மக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அருணா ஜெகதீசன் அறிக்கை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்ட சில அதிகாரிகளுக்கு குறிப்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனத்தைத் தெரிவித்திருந்தன. ஆனால், கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரை தமிழகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் அதுபோன்று மறுபடியும் இருக்கக் கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பம்.
விஜய் மிகப்பெரிய சினிமா நட்சத்திரம். இன்றைக்கு அவர் அரசியல் கட்சித் தலைவர். அவருக்கு இயற்கையாகவே மக்கள் கூடுகின்றனர்.

ஒரு இடத்திற்கு அவர் சென்றார். சொல்லாமலே ரசிகர்கள், மக்கள் கூடுகின்றனர். அப்படி கூட்டம் கூடும்போது அதை முறைப்படுத்த அவரது கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். காவல்துறையினால் அதை முழுமையாகச் செய்ய முடியாது.
காவல்துறையினர் சொல்வதைத் த.வெ.க. தொண்டர்கள் கேட்கப் போவது கிடையாது. மற்ற கட்சிகளில் தொண்டர்களைக் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்க அமைப்பு இருப்பது போல சகோதரர் விஜய்யும் அவரது கட்சியில் ஒரு அமைப்பைக் கொண்டு வர வேண்டும்.
அது அவரது இயக்கத்திற்கும் நல்லது, பொதுமக்களுக்கும் நல்லது, அரசாங்கத்திற்கும் நல்லது” என்றார்.