தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
காசா விவகாரம்: ``அமைதியை நிலைநாட்ட ட்ரம்பின் முயற்சியை ஆதரிப்போம்'' - பிரதமர் மோடி புகழாரம்
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் நிறுத்தம்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மனிதாபிமான உதவிகளைத் தடுப்பது, செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கியது, இஸ்ரேல் இராணுவத்தின் அடாவடித்தனங்கள் என இஸ்ரேலின் செயலை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. ஐ.நா-வில் பாலஸ்தீனத்துக்கான ஆதரவும் அதிகரித்தது.
இதனால் கடும் நெருக்கடியைச் சந்தித்த நெதன்யாகு, இஸ்ரேல் பக்கமும் நியாயம் இருப்பதாக வாதாடினார்.

ஆனால், அந்த வாதங்கள் எந்த வகையிலும் சரியானதாக இல்லை என உலக நாடுகள் அதைப் புறக்கணித்தன. இதனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் நெதன்யாகு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது.
அப்போது ட்ரம்ப் பரிந்துரைத்த 20 போர் நிறுத்தப் பரிந்துரைகளை நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி பதிவு:
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்தப் போர் நிறுத்தத்துக்கான முயற்சியை வரவேற்றிருக்கும் பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சி பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால மற்றும் நிலையான அமைதியையும், பாதுகாப்பையும் வழங்கும் என நம்புகிறேன்.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் மேற்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்கும் சாத்தியமான பாதையை வழங்குகிறது.
சம்பந்தப்பட்ட அனைவரும் அதிபர் ட்ரம்பின் முயற்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட ஆதரிப்போம் என்றும் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.