விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
Israel: கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட நெதன்யாகு - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?
இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன.
அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்தாரும், எகிப்தும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கிடையில், கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல் இஸ்ரேல் மீது உலக நாடுகளின் கண்டனத்தை தீவிரப்படுத்தியது. இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு, கத்தார் ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்ய மறுத்து வருகிறது.

அதைத் தொடர்ந்து நடந்த ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உலக நாடுகள் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிர்த்துக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.
மேலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஐ.நா-வில் உரையாற்றும்போதும், உலக நாடுகளின் தலைவர்கள் நெதன்யாகுவைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்பைச் சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியிடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.
அப்போது, செப்டம்பர் 9-ம் தேதி தோஹாவில் நடந்த தாக்குதலில் கத்தாரின் இறையாண்மையை மீறியதற்காக அல் தானியிடம் நெதன்யாகு மன்னிப்பு கேட்டதாகவும், தாக்குதலில் ஒரு கத்தார் பாதுகாப்பு காவலர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்குமான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான், நெதன்யாகு ட்ரம்பை சந்தித்திருக்கிறார். எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவரும் அடிப்படையில் இந்த மன்னிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.