வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ர...
கரூர் மரணங்கள்: ``ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று" - கனிமொழி
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு அரசியல் தலைவர்கள் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழியும் நேற்று (செப்.29) கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கரூர் சம்பவம் குறித்து பேசினார்.
அப்போது கனிமொழி, "கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது. யாரையும் குறை சொல்லும் நேரம் இது இல்லை.
ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் ஒரு தலைவர் அங்கிருந்து செல்வது இதுவரை பார்த்திராத ஒன்று. வன்முறையைத் தூண்டுவது உச்சக்கட்ட பொறுமையின்மை.
சமூக வலைதளங்கள் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ரணம், காயம் இன்னும் இருக்கக்கூடிய இடத்தில் தவறான விஷயங்களை சொல்லி அவர்களுக்கு மேலும் மேலும் வலிகளை ஏற்படுத்தக் கூடாது.
உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றது தி.மு.கதான். மக்களின் உயிர்தான் முக்கியமான விஷயம்.

அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாகச் செயல்பட வேண்டும். விசராணையில் உண்மை வெளிவரும். யார் மீது தவறு இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லாக் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கிறோம்.
ஆனால், அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் அங்கு இல்லை. இதைப் பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது" என்று கூறினார்.