பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.
வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜய் குமார் மல்ஹோத்ரா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை பகிர்ந்துள்ள நிலையில், சற்றுநேரத்தில் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த விஜய் குமார் மல்ஹோத்ரா?
லாகூரில் பிறந்த மல்ஹோத்ரா, ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இரண்டு முறை தில்லி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
தில்லியின் முதல் பாஜக தலைவரான இவர், இரண்டு முறை அப்பதவியை வகித்துள்ளார். இரண்டு முறை தில்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2008 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக விஜய் மல்ஹோத்ரா களமிறக்கப்பட்டார். அரசியல் மட்டுமின்றி விளையாட்டுத் துறை நிர்வாகத்திலும் திறம்பட செயல்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 1999 மக்களவைத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.