ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் 5 பேரையும் 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு அனுமதி!
சட்டவிரோத கனிமக் கொள்ளைக்கு எதிராக புகார் கொடுத்த புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த ஜனவரி 17-ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் சதி திட்டம் தீட்டப்பட்டு 407 மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருமயம் காவல் நிலைய போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து இந்த வழக்கில் ஆர்.ஆர் குரூப்ஸ் குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சூழலில், வழக்கில் கைதாகி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த குவாரி உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேரையும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், நேற்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனர். இதனையடுத்து, மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ’காவலில் விசாரணை செய்யும் ஐந்து நபர்களையும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் காவலில் விசாரணை செய்ய அழைத்துச் செல்ல வேண்டும்.
அதேபோல், விசாரணை முடிந்த பிறகு மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். விசாரணைக்கு எடுக்கும் ஐந்து நபர்களையும் விசாரணையின் போது எந்தவித துன்புறுத்தலுக்கும் உட்படுத்தக் கூடாது’ உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் காவல்துறை பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். மேலும், மூன்று நாள் விசாரணை முடிந்து வருகின்ற 6-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் அந்த ஐந்து நபர்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மறுபடியும் ஆஜர்படுத்த உள்ளனர். தற்பொழுது, காவலில் எடுத்துள்ள ஐந்து நபர்களையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூன்று நாட்கள் பல்வேறு கட்ட விசாரணையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக, தனித்தனியாக ஐந்து நபர்களிடம் விசாரிக்க உள்ளதாகவும், விசாரணை முடிவில் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது தெரியவரும் என்றும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.