பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!
பாபா ராம்தேவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்!
போலி விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் இணை நிறுவனர் பாபா ராம்தேவுக்கு எதிராக பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட்டை கேரள நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் தொடர்ந்து ஆஜராகாததால், பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து திங்கள்கிழமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் துணை நிறுவனமான திவ்யா பார்மசி வெளியிட்ட விளம்பரங்கள், மருந்துகள் மற்றும் மந்திர வைத்தியம்(ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 இன் விதிகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நோய்களைக் குணப்படுத்துவதாக ஆதாரமற்ற கூற்றுக்களை வெளியிட்டதாகவும் கேரளம் முழுவதும் பல குற்றவியல் வழக்குகள் திவ்யா பார்மசி மீது தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாலக்காடு மருத்துவத் துறை ஆய்வாளர் கடந்த ஆண்டு தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஆஜராக விடுத்த சம்மனுக்கு அவர் நேரில் ஆஜராகாததால், பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆனால், மீண்டும் பாபா ராம்தேவ் ஆஜராகததால், பிணையில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த விசாரணையை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு
ஏற்கெனவே, போலி விளம்பரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா மன்னிப்பு கோரினர்.
பதஞ்சலியின் போலி விளம்பரத்துக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், போலி விளம்பரம் தொடர்பாக செய்தித் தாள்களிலும் மன்னிப்பு கோரும் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது குறிப்பிடத்தக்கது.