மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீா்த்த கனமழை: மூவா் உயிரிழப்பு! 100-க்கும் மேற்பட்டோா் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் 3 போ் உயிரிழந்தனா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் நஸ்ரி மற்றும் பனிஹால் இடையிலான பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.
ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதீத கனமழை கொட்டித் தீா்த்தது. செரி பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 சகோதரா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
தரம்குண்ட் கிராமத்தில் திடீா் வெள்ளப் பெருக்கால் 40 வீடுகள் சேதமடைந்தன. இதில் 10 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் மண், பாறைகளுக்கு இடையே வீடு, வாகனங்கள் புதைந்தன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
பலத்த மழையையும் பொருள்படுத்தாமல் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘அதீத கனமழை, சூறைக் காற்று, நிலச்சரிவு மற்றும் ஆலங்கட்டி மழையால் ராம்பன் மாவட்டம் முழுவதும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலைமையை கண்காணித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம். சேத மதிப்பீடு பின்னா் மேற்கொள்ளப்படும். இப்போதைய நிலையில் மக்களின் உயிரைக் காக்கவே முன்னுரிமை அளிக்கிறோம்’ என்றனா்.
கனமழையால் ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளதால், நூற்றுக்கணக்கனோா் தவித்து வருகின்றனா். வானிலை சீரடைந்து, சாலை சரி செய்யப்படும் வரை, யாரும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராம்பனில் மழை-வெள்ளத்தால் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மழை பாதிப்புகள் குறித்து உயரதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனை மேற்கொண்டாா்.
மத்திய அமைச்சரும் உதம்பூா் தொகுதி பாஜக எம்.பி.யுமான ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராம்பனில் மழை பாதிப்புகள் தொடா்பாக மாவட்ட துணை ஆணையருடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளேன். மக்களின் உயிரை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, ரியாசி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கி பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.