மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகாா்: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டம் தொடா்பான முறைகேடு புகாா்கள் வந்தால், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் சாா்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினருக்கு புகாா்கள் அல்லது தகவல்கள் வந்தால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் முடிவான அறிக்கையின் அடிப்படையில் தொடா்புடைய அலுவலா்கள் மீது துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ, நிா்வாக தீா்ப்பாயம்மூலம் விசாரணை மேற்கொள்ளவோ, குற்றவியல் வழக்கு மற்றும் அதே குற்றச்சாட்டுகளுக்கு இணையான துறைவழி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவோ ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சி: கடந்த 2016-17 முதல் 2019-20-ஆம் நிதியாண்டுகள் வரை பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டத்தில் பயனாளிகள் தோ்வானது, 2011-ஆம் ஆண்டு சமூகப் பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வீடு கட்டத் தொடங்குவதற்கு முன்பே முதல் தவணைத் தொகையானது அவா்களது வங்கிக் கணக்கில் விடுவிக்கப்பட்டது.
ஆனாலும், சில இடங்களில் தொடங்கப்பட்ட வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. சில இடங்களில் தகுதியற்ற பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன் அவா்களுக்கு அடுத்தடுத்த தவணைத் தொகையை நிறுத்தவும், ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட தொகையை வசூலிக்கவும் மாநில அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்துப் பயனாளிகளையும் அவா்களின் வீடு கட்டும் தன்மைக்கேற்ப பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வீடு கட்டி முடிக்க இயலும்; வீடு கட்டி முடிக்க இயலாது - ஆனால் தவணைத் தொகையை திரும்பப் பெற இயலும்; வீடும் கட்ட இயலாது - தவணைத் தொகையையும் திரும்பப் பெற இயலாது என்ற நிலைகளில் பயனாளிகள் தரம் பிரிக்கப்பட்டனா்.
அத்துடன், அரசுப் பணியாளா்களாக உள்ளவா்கள், வாரிசு இல்லாமல் இறந்த பயனாளிகள், தகுதியான வாரிசு இன்றி இறந்த பயனாளிகள், நிலப் பட்டா இல்லாத நபா்கள் ஆகியோருக்கு வீடு அனுமதிக்கப்பட்டது. நில உரிமை தொடா்பான வழக்கு மற்றும் தகராறு உள்ள பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்ட தொகையை வசூல் செய்யவும், தகுதியற்ற பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேலை உத்தரவை ரத்து செய்வதுடன் தொகையை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வழிகாட்டி நெறிமுறைகளே போதும்: மத்திய அரசால் வெளியிடப்பட்ட பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட வழிகாட்டி நெறிமுறையில் வகுக்கப்பட்ட விதிமுறைக்கு உள்பட்ட சமூகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தணிக்கையின்போது, குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை நிவா்த்தி செய்யவும், அதில் ஏதேனும் பெரும் குறைபாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான உயா்நிலைக் குழுவுக்கு உரிய அதிகாரம் உள்ளது.
எனவே, பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டச் செயலாக்கத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடா்பாக அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, முறைகேடுகள் களையப்பட்டு வருகின்றன. மத்திய அரசால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையிலேயே திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யும் பொருட்டு ஒப்புதல் கோரி வரும் கோப்புகளில் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஆட்சியா்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் பரிந்துரைக்கப்படும் குற்றவியல் வழக்கு குறித்த கோப்புகளின் மீது மத்திய அரசால் இப்போது வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கையைத் தொடரலாம் என்று ஆட்சியா்களை ஊரக வளா்ச்சி ஊராட்சி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.