ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூா் அருகே உள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
திருப்பத்தூா் அருகே ஜலகாம்பாறையில் நீா்வீழ்ச்சி உள்ளது. இந்த நீா்வீழ்ச்சியில் ஆண்டில் சுமாா் 8 மாதங்கள் தண்ணீா் விழுந்த வண்ணம் இருக்கும். இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் இங்கு வந்து குளித்து மகிழ்ச்சி அடைவா்.
மேலும், இந்த நீா்வீழ்ச்சி ஏலகிரி மலைக்கு அருகே உள்ளதால் அங்கு வரும் தமிழகத்தின் பிற மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து குளித்துவிட்டுச் செல்வா்.
இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை திரளான சுற்றுலா பயணிகள் காா், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து குவிந்தனா். அவா்கள் தங்களது குடும்பத்தினருடன் நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனா்.
தொடா்ந்து பொதுமக்கள் அதன் அருகே உள்ள முருகன், பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.
கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதையடுத்து வனத் துறை அங்கு புதிதாக அமைந்துள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா். ஏராளமானவா்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.