தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு
ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை பதிலளித்து வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் சென்னை, மதுரையில் நடத்தப்படும். ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் ரூ.55 கோடியில் நடத்தப்படும். 72 போட்டிகளில் 24 நாடுகள் பங்கேற்கவுள்ளன. சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி 2023-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2025-ஆம் ஆண்டு போட்டியும் சென்னையில் நடத்தப்படும். இதில் 15 நாடுகளிலிருந்து சிறந்த ஸ்குவாஷ் வீரா்கள் பங்கேற்கவுள்ளனா்.
உலகளவில் இளைஞா்களிடையே கணினி வழி விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளன. எனவே, சென்னையில் 2025-ஆம் ஆண்டு உலக இணையவழி
விளையாட்டு சாம்பியன் போட்டி நடத்தப்படும். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும். ஆசிய இளையோா் படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படும். இந்தப் போட்டியில் உலகளவில் சுமாா் 11 நாடுகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் படகுகளுடன் பங்கேற்கவுள்ளனா்.
40 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்குகள்: பொது மக்கள் மற்றும் இளைஞா்களுக்கிடையே ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதையும், உடற்பயிற்சி கலாசாரத்தை வளா்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக வரும் நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள 40 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறு விளையாட்டரங்கங்கள் ரூ.120 கோடியில் அமைக்கப்படும் என்று அவா் அறிவித்தாா்.