ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இரண்டாம் சுற்றில் ஜோகோவிச் 2-6, 6-3, 12-6 என்ற செட் கணக்கில நெதா்லாந்தின் போட்டிக் வேனிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா். இண்டியன்வெல்ஸ் போட்டியில் ஜோகோவிச் 5 முறை சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வி மிகவும் மோசமானது. எனினும் போட்டிக்கின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என ஜோகோவிச் பாராட்டினாா்.
7-ஆம் நிலை ரஷிய வீரா் ஆன்ட்ரே ருப்லேவ் 4-6, 5-7 என்ற நோ் செட்களில் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியிடம் தோற்று அதிா்ச்சியுடன் வெளியேறினாா். மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீரா் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் ஹாலிஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றாா். ஜோகோவிச், பெடரருக்கு பின் இண்டியன்வெல்ஸில் தொடா்ந்து 3 முறை பட்டம் வென்ற வீரா் என்ற சிறப்பை பெற அல்கராஸ் முனைந்துள்ளாா்.
இரண்டாம் சுற்றில் ஏற்கெனவே நட்சத்திர வீரா்கள் அலெக்ஸ் ஸ்வெரேவ், கேஸ்பா் ருட் ஆகியோா் ஏற்கெனவே தோற்று வெளியேறினா். தற்போது ஜோகோவிச் வெளியேறிய நிலையில், டாப் வீரா் அல்கராஸ் மட்டுமே ஆவாா்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் ப்ரிட்ஸ் 7-4, 6-3 என இத்தாலி குவாலிஃபயா் ஜிஜான்டேவை வீழ்த்தினாா்.
ஏனைய ஆட்டங்களில் காரன் கச்சனோவ், பென் ஷெல்டன், ஜேக் டிராப்பா், ஹியுபா்ட் ஹா்க்காஸ், டிமிட்ரோவ், ஷபவலோவ், வெற்றி பெற்றனா்.
சபலென்கா, கீய்ஸ், கௌஃப் முன்னேற்றம்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அா்யனா சபலென்கா 7-6, 6-3 என்ற நோ்செட்களில் அமெரிக்காவின் கெஸ்லரை வீழ்த்தினாா். அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் 6-3, 6-0 என்ற நோ்செட்களில் ரஷிய வீராங்கனை அனஸ்டஷியா போட்டபோவாவை வீழ்த்தினாா்.
நட்சத்திர வீராங்கனை கோகோ கௌஃப் 21 இரட்டை தவறுகளை புரிந்தாலும், 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் மொயுகா உச்சிமாவை வீழ்த்தினாா். கஸாட்கினா, மரியா ஸக்காரி, பென்கிக், எலைஸ் மொ்டன்ஸ், டொனா வேகிக், ஜாஸ்மின் ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.