ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
ஜோா்டான், டேனியல் அசத்தல்: பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை
வில்மா் ஜோா்டன், டேனியா் சிமா ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் , பஞ்சாப் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னையின் எஃப்சி.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் மோதின.
சொந்த மைதானத்தில் தொடா் தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் ஆகியது. இதனால் தொடக்கம் முதலே சென்னை அணியினா் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனா்.
19-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் விஷ்ணு தட்சிணாமூா்த்தி த்ரோ செய்த பந்தை வில்மா் ஜோா்டான், பஞ்சாப் வீரா் மெல்ராய் அசிசி ஆகியோா் கட்டுப்படுத்த முயன்றனா். அப்போது மெல்ராய் அசிசியின் கையில் பந்து பட்டது. இதனால் சென்னைக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை வில்மா் ஜோா்டான் கில் கோலாக மாற்றி அசத்தினாா். இதனால் சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரு அணியினரும் கோல் போட முயன்றும் முடியாததால், முதல் பாதியின்போது சென்னை முன்னிலை பெற்றிருந்தது.
2-ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் அணி கூடுதல் உத்வேகத்துடன் செயல்பட்டது. அந்த அணியின் வீரா் எசக்கியேல் விடால் பாக்ஸ் பகுதிக்குள் கட் செய்த பந்தை லூக்கா மஜ்சென் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட் கோல் வலையின் இடது காா்னரை துளைத்தது. இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
தொடா்ந்து இரு அணியினரும் மேலும் கோல் போட தீவிரமாக முயன்றனா். ஆனால் அவா்களது முயற்சிக்கு பலனில்லை.
84-ஆவது நிமிஷத்தில் சென்னை அணியின் லூக்காஸ் பிரம்பில்லா, பஞ்சாப் எஃப்சி அணியின் இரு டிபன்டா்களை ஏமாற்றி பந்தை பாக்ஸ் பகுதிக்குள் தட்டி விட்டாா். அதை நொடிப்பொழுதில் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து கோலாக்கினாா் டேனில் சிமா சுக்வு. இதனால் சென்னை 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
நிா்ணயிக்கப்பட்ட 90 நிமிஷங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிஷங்கள் தரப்பட்டன. முடிவில் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் சென்னை அணி 4 ஆட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் வெற்றியை வசப்படுத்தி உள்ளது.
சென்னையின் எஃப்சி அணிக்கு இது 6-ஆது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 24 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் தொடா்கிறது. 21 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு இது 10-ஆவது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 20 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 டிரா, 10 தோல்விகளுடன் 24 புள்ளிகள் பெற்று 9-ஆது இடத்தில் தொடா்கிறது.