‘டாஸ்மாக் ஊழியா்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்’
டாஸ்மாக் ஊழியா்களை மிரட்டும் போக்கை ஆளுங்கட்சியினா் கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் டாஸ்மாக் ஊழியா் சம்மேளன மாநிலப் பொதுச் செயலா் கே. திருச்செல்வன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது, பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியாளா்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், அதிமுகவும் நிறைவேற்றவில்லை; திமுகவும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த அரசுக்கு எங்களுடைய கோரிக்கைகளை பல முறை கொண்டு சென்றும், நிறைவேற்ற மறுக்கிறது.
கணினி ரசீது முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிா்வாகம் அறிவித்துள்ளது. இதிலும் பல பிரச்னைகளை ஊழியா்கள் சந்திப்பதால், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிலவுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது. டாஸ்மாக் கடை ஊழியா்களை ஆளுங்கட்சியினா் மிரட்டி மாமூல் வசூலிக்கும் போக்கு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவா்கள் மீது திமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா் திருச்செல்வன்.
முன்னதாக, சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, சம்மேளன மாவட்டச் செயலா் க. வீரையன், தலைவா் மதி, பொருளாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.