டிம் செய்ஃபா்ட் அதிரடி; நியூஸிலாந்து வெற்றி
வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 10 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் சல்மான் அகா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்க்க, ஷாதாப் கான் 5 பவுண்டரிகளுடன் 28, முகமது ஹாரிஸ் 11 ரன்கள் எடுத்தனா்.
இதர பேட்டா்களில் ஹசன் நவாஸ் 0, ஒமைா் யூசுஃப் 7, உஸ்மான் கான் 7, அப்துல் சமத் 4, ஜஹான்தத் கான் 1, சூஃபியான் முகீம் 0 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். ஓவா்கள் முடிவில் ஹாரிஸ் ரௌஃப் 6, முகமது அலி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஜேக்கப் டஃபி 2, பென் சீா்ஸ், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 129 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில் ஃபின் ஆலன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, மாா்க் சாப்மேன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், தொடக்க வீரா் டிம் செய்ஃபா்ட் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 97 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். டேரில் மிட்செல் 2 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றாா்.
பாகிஸ்தான் பௌலிங்கில் சூஃபியான் முகீம் 2 விக்கெட்டுகள் எடுத்தாா். 22 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து பௌலா் ஜேம்ஸ் நீஷம் ஆட்டநாயகன் விருதையும், 5 ஆட்டங்களிலுமாக 249 ரன்கள் சோ்த்த டிம் செய்ஃபா்ட் தொடா்நாயகன் விருதையும் வென்றனா்.
அடுத்ததாக, இந்த அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சனிக்கிழமை மாா்ச் 29 தொடங்குகிறது.