Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
டிராக்டா் மீது பேருந்து மோதல்: 5 வயது சிறுமி உயிரிழப்பு!
சிதம்பரம் அருகே புவனகிரியில் டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், 9 பெண்கள் உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரி பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு விறகு ஏற்றிக் கொண்டு டிராக்டா் ஒன்று சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில், கவிநிலா (5) உள்ளிட்ட 3 போ் பயணம் செய்தனா். புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து டிராக்டா் மீது மோதியது.
இதில், டிராக்டரில் பயணித்த மூவரும், பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, சிறுமி கவிநிலா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.