'தங்கம் ஏறுமுகம்... பங்குச்சந்தை இறங்குமுகம்!' - இப்போது எதில், எப்படி முதலீடு செய்யலாம்?!
இப்போது சந்தையை பார்த்தால், தங்கம் ஏறுமுகத்தில் இருக்கிறது... பங்குச்சந்தையும், மியூச்சுவல் ஃபண்டும் சற்று இறங்குமுகத்தில் உள்ளது. 'இந்த நேரத்தில் முதலீடு செய்யலாமா?'. 'அப்படி முதலீடு செய்தால், எப்படி முதலீடு செய்ய வேண்டும்?' என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் எட்டிப்பார்க்கும். உங்களுடைய அத்தனை சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் விஷ்ணு வர்தன்...
"தங்கம், பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் - இப்படி நம்மிடம் இருக்கும் பணத்தை பிரித்து ஒவ்வொன்றிலும் முதலீடு செய்வது அசெட் அலோகேஷன் ஆகும்.
இப்போது இந்திய அளவில் தங்கம் விலை ஏறுமுகத்திலும், பங்குச்சந்தை இறங்குமுகத்திலும் இருக்கின்றன. தங்கம் ஏறுமுகத்தில் இருக்கிறது என்று அதில் அதிக முதலீடுகளும், பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அதில் குறைந்த முதலீடுகள் அல்லது முதலீடுகளே செய்யாமல் இருப்பதும் அசெட் அலோகேஷன் பொறுத்த வரை தவறு.
பொதுவாக, முதலீடு என்பது நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தரும். அதனால், இப்போதைய சந்தை மதிப்பை பாராமல், நம் தேவை என்ன... அது எத்தனை ஆண்டுகளில் தேவை என்பதை பொறுத்து அசெட் அலோகேஷன் செய்ய வேண்டும்.

இதுதான் அசெட் அலோகேஷன்!
தெளிவாக கூற வேண்டுமானால், முதலீடு செய்கிறேன் என்று தங்கத்தில் மட்டுமோ, பங்குச்சந்தையில் மட்டுமோ முதலீடு செய்வது நல்லதல்ல. தங்கம் நீண்ட காலத்தில் பங்குச்சந்தை அளவுக்கு பெரிய லாபத்தை தராது. பங்குச்சந்தையோ நமக்கு பணம் தேவைப்படும் காலத்தில் சந்தை சரிவில் இருந்தால் அது நம் முதலீட்டை பெரிய அளவில் பாதிக்கும்.
இதை தவிர்க்க, தங்கம், பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் என நம்முடைய ரிஸ்க் திறனுக்கு ஏற்ப முதலீடுகளை பிரித்து செய்ய வேண்டும். இது சரிவு காலங்களில் நமக்கு நஷ்டத்தை குறைத்து கொடுக்கும். இதற்கு பெயர் தான் அசெட் அலோகேஷன்.
முதலில் பார்க்க வேண்டியது...
அசெட் அலோகேஷன் பொறுத்தவரை, எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப் பணம் தேவை? என்பதை முதலில் பார்க்க வேண்டும். அடுத்ததாக, ரிஸ்க் எடுக்கும் திறனை பார்க்க வேண்டும்.
ரிஸ்க் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை என்பவர்கள் பங்குச்சந்தையில் 70 - 80 சதவிகித முதலீடும், தங்கத்தில் 10 சதவிகித முதலீடும், பாண்ட் அல்லது கடன் பத்திரங்களில் 10 சதவிகித முதலீடும் செய்துகொள்ளலாம்.
நடுத்தர ரிஸ்க் மட்டும் போதும் என்பவர்கள் பங்குச்சந்தையில் 60 சதவிகித முதலீடும், தங்கத்தில் 20 சதவிகித முதலீடும், பாண்ட் அல்லது கடன் பத்திரங்களில் 20 சதவிகித முதலீடும் செய்துகொள்ளலாம்.
குறைவான ரிஸ்க்கை விரும்பினால் பங்குச்சந்தையில் 50 சதவிகித முதலீடும், தங்கத்தில் 25 சதவிகித முதலீடும், பாண்ட் அல்லது கடன் பத்திரங்களில் 25 சதவிகித முதலீடும் செய்துகொள்ளலாம்.
இப்படி நினைக்காதீர்கள்!
சந்தை எப்போது, எப்படி போகும் என்று சொல்ல முடியாது. அதனால், உங்களது முதலீடுகளின் சந்தை மதிப்பை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஆக்குவது அசெட் அலோகேஷன்.
இப்போது சந்தை நிலவரத்துக்குள் சென்றால் தங்கம் விலை ஏறுகிறது... பங்குச்சந்தை சரிவில் உள்ளது. தங்கம் ஏறுமுகத்தில் உள்ளது என்று அதில் முதலீடுகளை கொட்டக் கூடாது. இப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதே சரியானது. இப்போது பங்குகளின் விலை குறைவாக இருக்கும். இப்போது குறைந்த விலைக்கு பங்குகளை வாங்கிவிட்டால், நீண்ட காலத்தில், பங்குச்சந்தை மதிப்பு ஏறும்போது, நமது முதலீட்டின் மதிப்பு கூடும்.
'நான் இப்போது முதலீடு செய்யவில்லை... சந்தை ஏற்றத்தில் இருக்கும்போதே, பங்குகளை வாங்கிவிட்டேன்' என்பவர்கள், 'அவசரப்பட்டு விற்றுவிடாமல், இன்னும் கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்பது நல்லது. நீண்ட காலத்தில், சந்தை மதிப்பு நிச்சயம் உயரும்" என்று விளக்குகிறார்.