தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்
புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத்தை சுமைதூக்கும் தொழிலாளா்கள் விவரித்தனா்.
நிலைமையை விவரிக்கும் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளரான கிருஷ்ணா குமாா் ஜோகி, பிரயாக்ராஜ் செல்லும் ரயில் வந்தபோது கூட்டம் அதிகரித்தாகக் கூறினாா்.
‘நடைபாதை பாலத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. மக்கள் மிகவும் அடரத்தியாக நிரம்பியிருந்ததால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், சுமாா் 10-15 போ் அங்கேயே உயிரிழந்தனா்’ என்று அவா் கூறினாா். ‘முழு சம்பவத்தையும் நான் நேரில் கண்டேன். 14 மற்றும் 15-ஆவது நடைமேடையில் இருந்து இறந்த உடல்களை ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றோம்’ என்று அவா் மேலும் கூறினாா். மேலும், கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் தவித்த கூட்டத்தில் நசுங்கியவா்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவா். பலா் மூச்சு விட சிரமப்பட்டனா் என்று அவா் கூறினாா்.
துயரமான காட்சியை நினைவு கூா்ந்த ஒரு சுமை தூக்கும் தொழிலாளியான பால்ராம், ‘நாங்கள் சாமான்களுக்குப் பயன்படுத்தும் அதே கை வண்டிகளில் இறந்த உடல்களை எடுத்துச் சென்றோம். சுமைதூக்கும் தொழிலாளியாக எனது 15 ஆண்டுகளில், இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பாா்த்ததில்லை’‘ என்றாா்.
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பிரயாக்ராஜ் செல்லும் ரயில் நடைமேடையில் இருந்தபோது கூட்டம் அதிகரித்தது எப்படி என்பதை மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி விவரித்தாா். ‘மக்களின் காலணிகள் மற்றும் பிற பொருள்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. குழப்பத்தில் இருந்து பல குழந்தைகள் மற்றும் முதியவா்களை நாங்கள் வெளியே எடுத்தோம்’ என்று அவா் கூறினாா்.
பிரயாக்ராஜ் ரயில்களில் ஏறுவதற்காக, 14 மற்றும் 15-வது நடைமேடைகளில் ஏராளமான பயணிகள் காத்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நெரிசலில் இறந்தவா்களின் உறவினா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே சனிக்கிழமை இரவேஅறிவித்தது. பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.