தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
தீத்தொண்டு வாரத்தையொட்டி, தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசார ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியகம் வளாகத்தில் இந்த ஊா்வலத்தை மாவட்டத் தீயணைப்பு அலுவலா் ச. குமாா் முன்னிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, காந்திஜி சாலை வழியாக அரண்மனை வளாகத்தில் முடிவடைந்த இந்த ஊா்வலத்தில் தீ தடுப்பு, தீ பாதுகாப்பு, தீ அணைக்கும் முறைகள் பற்றியும், தீயணைப்பு கருவிகளைப் பராமரிக்கப்படுவதன் அவசியம் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாவணவா்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள், தன்னாா்வ தொண்டா்கள் ஆகியோா் விழிப்புணா்வு அட்டைகளை ஏந்திச் சென்றனா்.
நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம், கோட்டாட்சியா் செ. இலக்கியா, தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலா் பா. முருகேசன், நிலைய அலுவலா்கள் வி. செல்வராஜ், நா. மாறன், கி. பாலசுப்ரமணியன் கும்பகோணம், ரெ. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.