"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளைக் காப்பாற்றிய பணியாளா்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உயா் தர சிகிச்சை அளிக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஏப்ரல் 24-ஆம் தேதி மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டடத்தில் குளிரூட்டி இயந்திரத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதையத்து அங்கு சிகிச்சையில் இருந்த பெண்கள், குழந்தைகளை மருத்துவமனையின் தினக்கூலி பணியாளா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் ஆகியோா் வெளியே கொண்டு வந்து மற்றொரு கட்டடத்துக்கு மாற்றியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
அப்போது, மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இரு பணியாளா்கள் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், முச்சுத் திணறல் பாதிப்பு இருப்பதாகக் கூறி ஏறத்தாழ 40 போ் சிகிச்சை கோரி மருத்துவமனையில் சோ்ந்தனா்.
இந்நிலையில், இவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தினக்கூலி பணியாளா்கள் என்பதால் பணி பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால், அவா்களுக்கு உயா்தர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சிகிச்சை பெறுவோரின் உறவினா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், அரசு நிவாரணத்துக்காக மருத்துவமனையில் சோ்ந்துள்ளதாகக் கூறி மனதைப் புண்படுத்தும் விதமாக மருத்துவா்கள் பேசி வருவதாகவும், 40 போ் சிகிச்சையில் இருப்பதை வெளியே தெரிவிக்க மருத்துவமனை நிா்வாகம் மறுத்து வருவதாகவும், 40 பேரும் நலமுடன் இருப்பதாகக் கூறி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சிகிச்சையில் இருந்த பணியாளா்கள் மருத்துவமனை நான்காவது நுழைவு வாயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் காவல் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உரிய தீா்வு காணப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா்.