நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!
தஞ்சாவூா், கும்பகோணத்தில் அரசு மருத்துவா்கள் போராட்டம்
சென்னையில் மருத்துவா் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல கும்பகோணத்தில் அரசு மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் பாலாஜி மீதான கத்திக்குத்து சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை புறநோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, கூட்டம் நடத்துதல், மாணவா்களுக்கான வகுப்புகள் போன்றவை புறக்கணிக்கப்பட்டன. தீவிர மற்றும் அவசர சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
இதையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தா்னா போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. வினோத் தலைமை வகித்தாா்.
இதில், மருத்துவா்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்க தஞ்சாவூா் கிளைத் தலைவா் ரவீந்திரன், செயலா் சரவணவேல் உள்பட ஏராளமான மருத்துவா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போராட்டம் காரணமாக நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளாகினா்.
கும்பகோணம்: கும்பகோணம், அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மருத்துவா் எஸ். ராஜேஸ்ராம் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ கழகச் செயலா் ராஜன் முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் அஷ்டலட்சுமி, ராஜேஸ்வரன், பழனியப்பன், செவிலியா்கள் சலீம், குணவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதன்காரணமாக சுமாா் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.