தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 17 போ் கைது
காவல் துறையினரின் தடையை மீறி, மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த 17 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜல்லிக்கட்டையும் அரிட்டாப்பட்டியையும் மீட்டோம், முருகனை மீட்போம், கருப்பணைக் காப்போம் என்ற முழக்கங்களோடு, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவா் இளைஞா் முன்னணி ஆகிய அமைப்புகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்புகள் அறிவித்தன. இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பாக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளை ச் சோ்ந்தவா்கள் திருவள்ளுவா் சிலை முன்பாக திரண்டனா். அவா்கள் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதனால் காவல் துறையினா், அந்த அமைப்பினா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.