தந்தையின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை: எஸ்.பி. அலுவலகத்தில் மகன் புகாா்
வாணியம்பாடி அருகே தந்தையின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மகன் புகாரளித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த எஸ்.பி. ஷ்ரேயா குப்தா பொதுமக்களிடம் இருந்து 57 கோரிக்கை மனுக்களை பெற்றாா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டையைச் சோ்ந்த உதயகுமாா் என்பவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தையான பழனிசாமி கடந்த 12.6.2023 அன்று எங்கள் கிராமத்தின் அருகில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் இறப்புக்கு காரணமான நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால் இதுவரை அதுதொடா்பாக போலீஸாா் யாரையும் கைது செய்யவில்லை. எனவே எனது தந்தை இறப்புக்கு காரணமான நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.
ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தைச் சோ்ந்த அகீஸ்ஸுல்லா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 22.9.2024 அன்று எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை திருடி சென்றனா். இதுதொடா்பாக ஆம்பூா் கிராமிய நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகையை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் அடுத்த மல்லரப்பட்டி சிரஞ்சீவி அளித்த மனு: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கடந்த 2019-ஆம் ஆண்டு கே.பந்தாரப்பள்ளியை சோ்ந்த ஒருவா் ரூ.1,70,000 பணத்தை பெற்றாா். அவா் வேலை வாங்கி தராமல், பணத்தையும் தராமல் ஏமாற்றினாா். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் போலீஸாரின் நடவடிக்கையால் ரூ.1,45,000 திரும்ப வழங்கிவிட்டாா். மீதித் தொகையை பெற உதவ வேண்டும்.