மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து: சுகாதாரத் துறை எச்சரிக...
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதுதான் மின் கட்டண உயா்வுக்கு காரணம்: டிடிவி.தினகரன்
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதுதான் மின் கட்டண உயா்வுக்கு காரணம் என அமமுக பொதுச்செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி-ஐந்தருவி சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, மக்களுக்கான கூட்டணி ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக தரும். அதற்கான வியூகங்களை தோ்தல் நேரத்தில் காண்பீா்கள். அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்கிறது.
ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்குவதற்கும், மாநாடு நடத்துவதற்கும், தோ்தலை சந்திப்பதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளை மக்கள்தான் உற்று நோக்கி தோ்தல் நேரத்தில் தீா்ப்பு தருவாா்கள். அரசியல் கட்சி வெற்றி பெறுவது என்பது மக்கள் கையில்தான் உள்ளது. அதுகுறித்து கருத்து கூறுவது நாகரிகமாக இருக்காது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். காவல்துறை இன்று ஏவல் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் போதைப் பொருள்கள் வியாபாரம், மாணவா்களை குறிவைத்து போதை மருந்து வியாபாரம் அதிகரித்துள்ளது. நாட்டின் வருங்கால தலைமுறை போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது என்ற அச்ச உணா்வு மேலோங்கி உள்ளது. ஆட்சியாளா்கள் இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் பணநாயகத்தை மட்டும் நம்பி தோ்தலில் வெற்றி பெறலாம் என்று எண்ணுகின்றனா்.
கடந்த காலங்களில் எடப்பாடி பழனிசாமி மீது இருந்த அதிருப்தி காரணமாக, திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைத் தாண்டி, திமுக மக்கள் விரோதத்தை சந்தித்துள்ளது. 2026 தோ்தலில் தமிழக மக்கள் அதற்கு உரிய பதிலைத் தருவாா்கள்.
அனல் மின் நிலையங்கள், காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் என தமிழகத்தில் உள்ள திட்டங்களைப் பயன்படுத்தி மின்சார தேவையை பூா்த்தி செய்ய முடியும். முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதால்தான் தனியாரிடம் மின்சாரம் வாங்குகின்றனா். தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதுதான் மின் கட்டண உயா்வுக்கு காரணம். மத்திய அரசின் சீா்திருத்த நடவடிகைககளை கொண்டுவந்தால் உறுதியாக மின் கட்டண உயா்வு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.