ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
தனுசு ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்
தனுசு ராசியில் பிறந்த நீங்கள், சேமிப்பதில் சிறந்தவர் நீங்கள். பணம்-காசுடன் நற்பெயரையும் சம்பாதிப்பீர்கள். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!
1. தனுசு ராசி அன்பர்களே! உங்கள் ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. மனதில் சரியெனப் பட்டதையே செய்வீர்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள்.
2. இந்த ஆண்டு சனியின் சஞ்சார நிலையால், திடீர் யோகம் உண்டு. பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். நேர்மறைச் சிந்தனைகள் பிறக்கும்.
3. வீட்டில் கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
4. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வேற்று மொழியின ரால் ஆதாயம் அடைவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
5. செவ்வாய் 8-ல் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், உடன்பிறந்த வர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களைச் சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.
6. பழைய வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அடிக்கடி பேசவேண்டாம். அண்டை அயலாருடன் அளவாகப் பழகுங்கள்.
7. புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.4.2025 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பளப் பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
8. தாயாருக்கு முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்துசெல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம்; விபத்துகள் நிகழக்கூடும்.
9. மே 26 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துசெல்லும்.
10. ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
11. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 10.5.2025 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குருபகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகம் என்று ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்கநேரிடும்.
12. பணப்பற்றாக்குறையைப் போக்கக் கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
13. மே 11 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும்.
14. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் அன்பர்களுக்கு, அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
15. விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் சீராகும். மனக்குழப்பம், சஞ்சலங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
16. தொழில் மற்றும் வெளி வட்டாரங்களில் உங்களை எதிர்த்த வர்களும் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள்.
17. வியாபாரிகளே! விளம்பரங்களுக்குச் செலவிடுவீர்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் சக வியாபாரிகளுடனான கருத்து மோதல்கள் விலகும். அவர்களால் ஆதாயம் உண்டாகும்.
18. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.
19. கெமிக்கல், கமிஷன், வாகன உதிரிப் பாகங்களால் லாபம் அடைவீர்கள். அரசின் கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்குத் திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும்.
20. உத்தியோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
21. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் வரும்.
22. கணினித் துறையினரே! அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். சலுகைகள் அதிகரிக்கும்.
23. புதிய முயற்சிகளில் இறங்கும்போது வீண் தயக்கம் கூடாது. புதிய நபர்களிடம் உதவிகள் பெறும்போது கவனம் தேவை. அகலக்கால் வைக்கக்கூடாது.
24. புதிய சொத்துகள் வாங்குவது, தொழிலில் புதிய கிளைகள் தொடங்கும்போது வாழ்க்கைத் துணைவர் பெயரில் பதிவுசெய்வது சிறப்பு. பிள்ளைகளிடம் கண்டிப்பு வேண்டாம்.
25. சமயோஜித புத்தியால் முன்னேற்றம் காணவைப்பதாக இந்தப் புத்தாண்டு அமையும். பெளர்ணமி தினங்களில் அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபடுங்கள்; சர்க்கரைப் பொங்கல் படைத்து குழந்தைகளுக்கு விநியோகம் செய்யுங்கள்; வாழ்வு இனிக்கும்.