மகர ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்
மகர ராசியில் பிறந்த நீங்கள், அன்பால் அனைவரையும் அரவணைப்பவர். உதவும் குணம் நிறைந்தவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!
1. மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. துணிச்சலும் எதையும் சாதிக்கும் மனப்பக்குவமும் வாய்க்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள்.
2. இந்தப் புத்தாண்டில், பலவகையிலும் வெற்றிகள் சூழ்ந்து உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும், அலைச்சலும், திடீர்ப் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.
3. இந்த ஆண்டு பிறக்கும்போது 7-ல் செவ்வாய் நிற்பதால், மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள்.
4. இந்த வருடம் முழுக்க சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
5. பிள்ளைகளைப் படிப்பின் பொருட்டுக் கசக்கிப் பிழியவேண்டாம். அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.
6. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டுச் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
7. புத்தாண்டின் தொடக்கம் முதல் 25.4.2025 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும்.
8. பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.
9. ஏப்ரல் 25 வரையிலும் 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.
10. இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.
11. ஏப்ரல் 26 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.
12. பயணத்தில் சிறு விபத்துகள் ஏற்படலாம் என்பதால், வாகனத்தை இயக்குமுன் எரிபொருள் இருக்கிறதா, பிரேக் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள்.
13. புத்தாண்டின் தொடக்கம் முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும்.
14. குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் சிறப்பாக அமையும்.
15. குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.
16. மே-11 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 6-ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும்.
17. வி.ஐ.பிகளைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர், தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள்.
18. வியாபாரிகளே! பக்கத்து கடைக்காரருடன் இருந்துவந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொட்டது துலங்கும். பற்று, வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.
19. டெக்ஸ்டைல்ஸ், மருந்து, உணவு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். சிலர் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் கொட்டம் அடங்கும். உங்களின் ஆலோசனைக்குத் தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.
20. உத்தியோகஸ்தர்களே! வீண் பழிகள் நீங்கும். பணியில் நல்ல பெயர் கிடைக்கும். நெடுநாளாக எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும்.
21 அரசுத் துறை பணியாளர்களுக்குக் கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். உங்களின் தனித் திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள் . மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களைத் தெரிந்துகொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
22. கணினித் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சலுகை களுடன் கூடிய பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு.
23. அரசாங்க விஷயங்களில் அசட்டை வேண்டாம். வங்கி லோன் தவணைகள் முதலானவற்றை உடனுக்குடன் கட்டிவிடுங்கள். இதனால் அபராதங்களைத் தவிர்க்கலாம்.
24. உடன்பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்விகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை. கோர்ட், கேஸ் என்று போகாமல் பேசித் தீர்க்கவும். புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைக் குப் பிறகு செயலில் இறங்குங்கள்.
25. குடும்பத்துடன் சென்று திருச்செந்தூர் முருகனை சஷ்டி தினங்களில் தரிசித்து வழிபட்டு வாருங்கள். குலதெய்வத்துக்குப் படையலிட்டு வணங்குங்கள்; தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்!