ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்
எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் என்ஹெச்ஆர்சி சார்பில் "டிஜிட்டல் காலத்தில் தன்மறைப்பு நிலை மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல்' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் என்ஹெச்ஆர்சி தலைவர் வெ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், "டிஜிட்டல் உலகில் தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம். அடிப்படை மனித உரிமைகள் மற்றும் தன்மறைப்பு நிலை பாதுகாப்புக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் பயன்பாட்டில் குறைபாடுகள் இருக்கக் கூடாது. புதுமையான கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, ஒருவரின் தன்மறைப்பு நிலை ஆகியவற்றை சமநிலையுடன் கையாளும் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு டிஜிட்டல் உரிமைகள், நிறுவனங்கள் பொறுப்பேற்பது ஆகியவை குறித்து அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விவாதங்களை ஊக்குவிப்பதில் என்ஹெச்ஆர்சி உறுதியாக உள்ளது' என்றார்.
என்ஹெச்ஆர்சி உறுப்பினரும் முன்னாள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான வித்யுத் ரஞ்சன் சாரங்கி பேசுகையில், "டிஜிட்டல் பயன்பாடு குறித்துப் பொதுமக்கள் பலருக்குத் தெரியவில்லை. அவர்கள் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்த பிறரைச் சார்ந்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே சாமானியர்கள் டிஜிட்டல் முறையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை அதிகரிக்க, அந்தத் தொழில்நுட்ப நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்' என்றார்.