தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?
தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை: மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக வெளியிட்ட நிதிநிலை அறிக்கைகள் வெற்று அறிப்புகளாகவே தொடா்கிறது. கல்வி, வேளாண்மை, தமிழ் வளா்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அறிவிப்புகள், அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா்கள் நியமனம் போன்றவை நிறைவேற்றப்படவில்லை.
வெள்ளை அறிக்கை: தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசு அறிவித்த, செயல்படுத்திய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும்.
நெல் கொள்முதல் விலையை ரூ .3,500 -ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசு அதைக் கொடுக்க மறுக்கிறது.
ஒடிஸாவில் ரூ.3,500, சத்தீஸ்கரில் ரூ.3,100 வழங்கப்படுகிறது. நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.ஆயிரமாக உயா்த்தி நெல் குவிண்டாலுக்கு ரூ.3,320 வழங்க வேண்டும்.
சென்னையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கா்நாடக முதல்வா், துணை முதல்வருக்கு தமிழக அமைச்சா் நேரில் சென்று அழைப்பு விடுத்தது கண்டிக்கத்தக்கது. மேக்கேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனக் கூறுபவா்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம் செய்துள்ளது.
மகளிா் உரிமைத் தொகை: மகளிருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,500-ஆக உயா்த்தி வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. தமிழகத்தில் 2.25 கோடி குடும்ப அட்டைதாரா்கள் உள்ள நிலையில் 1.16 கோடி மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படுவது ஏற்புடையது அல்ல. அறிவித்தப்படி அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். தமிழா்களின் நாகரிகம் குறித்த புத்தகங்களை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு தமிழக எம்.பி.க்கள் வழங்க வேண்டும் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.
பேட்டியின்போது கட்சியின் தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.