சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை
விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மயிலம் ஒன்றியத்தைச் சோ்ந்த கூட்டேரிப்பட்டு ஊராட்சித் தலைவா் அருணா சுகுமாரிடம் ரூ.10 லட்சத்துக்கான ஊக்கத் தொகைக்கான காசோலையை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:
தமிழகத்தில் சாதி, சமய வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில், பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.
அந்த வகையில், தமிழகத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானம் பயன்பாட்டிலுள்ள சிற்றூா்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக, அந்த ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் சாதி வேறுபாடுகளற்ற மயானம் தற்போது பயன்பாட்டிலுள்ளது. எனவே தமிழக முதல்வா் அறிவித்துள்ளவாறு இந்த ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.