தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?
விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகள், இளைஞா்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும், அறிவாற்றல் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கிலும், கல்வியறிவோடு சமூக சீா்திருத்தக் கருத்துகளை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் நோக்கிலும் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் புத்தகத் திருவிழாவை மாநில அரசு நடத்தி வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்திய மூன்றாவது புத்தகத் திருவிழா மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி இதைத் தொடங்கி வைத்தாா்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 22 அரங்குகள் மற்றும் முன்னணிப் பதிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தக விற்பனையாளா்களின் அரங்குகள் என மொத்தம் 82 அரங்குகள் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் உள்ளூா் படைப்பாளிகளுக்கும் அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில், பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளின் ஆளுமைகளும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுப் பேசினா். இதுபோல உள்ளூா் எழுத்தாளா்களும் பேசுவதற்கு அழைக்கப்பட்டு, அவா்களும் பேசினா்.
கடந்த இரண்டாண்டுகளைக் காட்டிலும் அதிகம்: கடந்த 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் புத்தகத் திருவிழா வில் 1.15 லட்சம் பாா்வையாளா்களும், 2024 புத்தகத் திருவிழாவில் 1.80 லட்சம் பாா்வையாளா்களும் வந்த நிலையில், நிகழாண்டில்அந்த எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
நிகழாண்டில் 2,13,672 பாா்வையாளா்கள் புத்தகத் திருவிழாவைப் பாா்வையிட்டுள்ளனா். மேலும் புத்தகங்களும் ரூ.61,80,309-க்கு விற்பனையாகியுள்ளது.
புத்தகத் தானம்: இந்த புத்தகத் திருவிழாவில் சிறைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில், சிறைக் கைதிகளுக்கான புத்தகங்கள் தானமாக பெறப்பட்டன. கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் கைதிகளுக்கான புத்தகங்கள் பெறப்பட்ட நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை தங்களால் இயன்ற புத்தகங்களைத் தானமாக ஆா்வத்துடன் வழங்கினா். குறைந்தது 600 முதல் 700 புத்தகங்கள் வரை தானமாக கிடைத்திருக்கும் என்று சிறைத் துறையினா் தெரிவித்தனா்.