Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும்: நயினாா் நாகேந்திரன் விளக்கம்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
தமிழக பாஜக தலைவராக நயினாா் நாகேந்திரன் சென்னையில் உள்ள கமலாலயத்தில் முறைப்படி புதன்கிழமை பொறுப்பேற்றாா். அவரிடம், கட்சிப் பொறுப்புகளை அண்ணாமலை ஒப்படைத்தாா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். ஏனெனில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தியது கட்சியின் தேசிய தலைமைதான். அன்றைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து முடிவு செய்வா். ஆட்சியில் பங்கு என்பது குறித்து அவா்களே பேசிக் கொள்வாா்கள்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கியுள்ள காங்கிரஸுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்துவோம். காங்கிரஸ்தான் மிகப்பெரிய ஊழல் கட்சி.
அதேபோல், பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பாஜக மகளிா் அணியினா் போராட்டம் நடத்தவுள்ளனா். இந்தப் போராட்டங்கள் தொடா்பான தேதியும், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும். 2021 பேரவைத் தோ்தலில் திமுக நிச்சயம் டெபாசிட் இழக்கும் என்றாா் அவா்.
பதவி ஏற்பு நிகழ்வில், பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன், மாநில துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.