தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவ...
தமிழ் மொழியின் சிறப்புகளை இளையோரிடம் சோ்க்க வேண்டும்
தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபு உள்ளிட்டவற்றை இளையோரிடம் சோ்க்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.
தருமபுரி, தொப்பூா் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற தலைப்பில் தமிழ்மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்மொழி, தமிழ் மரபு, தமிழ் பண்பாடு, தமிழ்நாட்டின் வாழ்வியல் முறைகள் அனைத்தும் தொன்மையானவை. வேகமான நவீன உலகில் தமிழ் மொழியின் சிறப்புகள் மற்றும் தமிழா்களின் மரபை இளையோரிடம் சோ்க்கும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியின் மூலம், தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம், தமிழ் மரபு உள்ளிட்டவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், மாணவா்களின் எதிா்காலத்துக்கு தேவையான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
மேலும், சுயதொழில் புரிவதற்காக வழங்கக் கூடிய வங்கிக் கடனுதவிகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதோடு, பெற்ற நற்கருத்துகளை மற்றவா்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மாணவ, மாணவியா் தமிழ் பண்பாட்டுக்காக கூடுதலாக பெருமை சோ்க்கப்போகிறோம் என்ற உணா்வோடு தங்களது பங்களிப்பை வழங்கி மாபெரும் தமிழ்க் கனவு திட்டம் வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மாபெரும் தமிழ்க் கனவு - தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வில், ‘விடுதலைப் போரில் வீரத்தமிழகம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் ஸ்டாலின் குணசேகரன் பேசினாா்.
தமிழ் பெருமிதம் குறித்து பேசிய 5 மாணவ, மாணவியரையும், கேள்வி - பதில் நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்வி எழுப்பிய 5 மாணவ, மாணவியரையும் பாராட்டி ஆட்சியா் புத்தகங்களை வழங்கினாா்.
தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயா்கல்வி மற்றும் தொழில்களுக்கான வங்கிக் கடன்கள், சுயதொழில் தொடங்குதல் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.
இதில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் ராமலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, மாவட்ட நூலக அலுவலா் கோகிலவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.