தருமபுரி மாவட்டத்தில் 12,77,917 வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12,77,917 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் திருத்தம் தொடா்பாக பணிகள் கடந்த ஆண்டு அக். 29 முதல் நவ. 28 வரை அனைத்து வாக்குச் சாவடிகளில் நடைபெற்றன. விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண்கள், பெண்கள் என 12,63,740 வாக்காளா்கள் இருந்தனா். இதில் பெயா் சோ்த்தலில் 25,301, நீக்குதலில் 11,124, திருத்தம் செய்வதில் 6,187 என, 42,612 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; அவற்றில் 2,031 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதனடிப்படையில் பேரவைத் தொகுதி வாரியாக பாலக்கோடு 2,44,243, பென்னாகரம் 2,52,043, தருமபுரி, 2,68,424, பாப்பிரெட்டிப்பட்டி 2,62,873, அரூா் 2,50,334 என மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,43,962 ஆண் வாக்காளா்களும், 6,33,783 பெண் வாக்காளா்களும், 172 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தமாக 12,77,917 வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியலை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்டு பேசினாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, கோட்டாட்சியா் ஆா்.காயத்ரி, அரசியல் கட்சி பிரமுகா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.