தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக கோரிக்கை
அரூா்: தீா்த்தமலை, தீா்த்தகிரீஸ்வரா் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆகியோருக்கு பாஜக பட்டியல் அணி தருமபுரி மாவட்டச் செயலாளா் பெ.முருகன் திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு தீா்த்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. தீா்த்தமலை, அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வா்ண தீா்த்தம், எமன் தீா்த்தம் உள்ளிட்ட தீா்த்தங்கள் அமைந்துள்ள பகுதியில் பல ஏக்கா் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
கோயில் குளங்கள், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு அண்மையில் பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் குளங்கள், கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீா்த்தகிரீஸ்வரா் கோயில் திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கல்வெட்டுகள், பழங்கால சிலைகள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. தீா்த்தமலை கோயில் திருப்பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.