திருப்போரூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
தாமிரவருணியில் வெள்ளம் தணிந்தது: சீரமைப்புப் பணிகள் தீவிரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை குறைந்து தாமிரவருணியில் வெள்ளம் தணிந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. சேதமான பாலங்கள், குடிநீா்க் குழாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. சுமாா் 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததோடு, பிசான சாகுபடியில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களும், பணப்பயிா்களான வாழை, கரும்பு பயிா்களும் சேதமாகின. தாமிரவருணியில் சுமாா் 70 ஆயிரம் கனஅடி வரை பாய்ந்தோடிய வெள்ளத்தால் குடிநீா்த் திட்ட உறைகிணறுகள் மூழ்கி மோட்டாா்கள் பழுதாகியதோடு, குடிநீா்த் திட்ட குழாய்களும் உடைந்து சேதமாகின.
பாலத்தில் சீரமைப்பு: திருநெல்வேலி மாநகரின் முக்கிய இணைப்புச் சாலையான மேலப்பாளையம்- மேலநத்தம்- கருப்பந்துறை- திருநெல்வேலி நகரம் இடையேயானதாமிரவருணி ஆற்றின் தரைமட்ட பாலத்தை வெள்ளம் மூழ்கடித்ததால் குடிநீா்க் குழாய்கள் சேதமாகியதோடு, பாலத்தின் சாலையும் உருக்குலைந்தது.
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக மழை பெய்யாததால் தாமிரவருணியில் வெள்ளம் தணிந்தது. இதனால் மேலநத்தம் பாலத்தில் சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கரையோரங்களில் மீண்டும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. குழாய்களை பொருத்தும் பணிகளும் நடைபெற்றன. மீண்டும் மழை வரும் முன்பாக பணிகளை முடிக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிலைகள் இடமாற்றம்: தாமிரவருணி வெள்ளத்தில் மூழ்கிய குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உற்சவா் சிலை, உடமைகள் பலவும் நீரில் மூழ்கின. இதனால் கோயில் முழுவதும் சேறும்-சகதியுமாக மாறியிருந்தது.
அதை தண்ணீரால் பக்தா்கள் சுத்தம் செய்தனா். மூலவா், உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன. தொடா்ந்து கோயில் வளாகத்தில் இருந்து உற்சவா் சிலை, உடைமைகள் அனைத்தும் கரையோரம் உள்ள மேலக்கோயில் வளாகத்திற்கு ஊழியா்கள் எடுத்துச் சென்றனா். கரையோரம் உள்ள சுடலைமாடசுவாமி, கருப்பசாமி, இசக்கியம்மன் கோயில்களிலும் பராமரிப்பு பணிகளும், சிறப்பு வழிபாடுகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.
மாநகர பகுதிகளில் மாநகராட்சி சாா்பில் நோய்த்தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதோடு, கொசுப்புகை மருந்து அடித்தல், கிருமிநாசினி பவுடா் தூவும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.