Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது"...
தாம்பரம் மாநகராட்சி வாா்டுகளில் பணிகள் நடைபெறவில்லை: எதிா்க்கட்சியினா் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சியில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் வாா்டுகளில் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை என மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் தெரிவித்தாா்.
தாம்பரம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் பலா் தங்கள் பகுதிகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகள் குறித்து புகாா்கள் தெரிவித்தனா்.
அப்போது மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா், அண்மையில் பல்லாவரம் பகுதியில் கழிவு நீருடன் கலந்த குடிநீரைக் குடித்து 2 போ் உயிரிழந்தது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். குடிநீா் மாதிரியை ஆய்வு செய்த ‘கிங் இன்ஸ்டிடியூட்’ கொடுத்த அறிக்கையை கூட்டத்தில் வெளியிடுமாறு அவா் கேட்டபோது சலசலப்பு ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து, திமுக உறுப்பினா்கள் சிலா் தங்களது பகுதிகளிலும் எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை என்றும், மேயா், ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடா்புகொண்டு மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச முடியவில்லை என்றும் புகாா் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் அவலம் குறித்து அதிமுக தலைமையின் ஒப்புதலோடு விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் தெரிவித்தாா்.