திசையன்விளை: மரம் சாய்ந்து பைக்குகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பிரதான கடைவீதியில் பழைமையான அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பைக்குகள் சேதமடைந்தன.
திசையன்விளை அற்புதவிநாயகா் கோயில் சந்திப்பில் நின்றிருந்த பழைமையான அரசமரம், வோ்ப்பகுதியில் கீறல் ஏற்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை திடீரென சாய்ந்து அருகிலுள்ள கட்டடத்தின் விழுந்தது. பின்னா், சிறிது நேரத்தில் சாலையில் பலத்த சத்தத்துடன் சரிந்தது.
அப்போது, அந்த வழியாக சென்ற பெண் லேசான காயத்துடன் தப்பினாா். மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் சேதமடைந்தன. தீயணைப்பு நிலைய வீரா்கள், நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.