அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!
திண்டுக்கல்: `மாநகராட்சி கூட்டரங்கிற்கு கருணாநிதி பெயரா?' - கொதிக்கும் அதிமுக சீனிவாசன்!
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. இதில், `மாநகராட்சிக்கு ஆத்தூர் நீர்த்தேக்க தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. வரும் நீரும் கலங்கலாக வருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்கவில்லை. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் கடைகள் மறு ஏலம் அறிவிப்பு முறையாக இல்லை. பூ மார்க்கெட் புதிய கட்டடத்திற்கு முறையாக வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை' என்பன போன்ற குறைகள் கூறப்பட்டன. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேயர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டரங்கிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரைச் சூட்ட வேண்டும் என சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டரங்கிற்கான எம்.ஜி.ஆர் பெயரை மாற்றி கருணாநிதி பெயரைச் சூட்ட தீர்மானம் போடப்பட்டதைக் கண்டிப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``அ.தி.மு.க-வின் திட்டங்களுக்கு லேபிள் ஒட்டும் வேலையைத்தான் தி.மு.க அரசு செய்து வருகிறது. தற்போது எம்.ஜி.ஆர் பெயரையே அகற்ற முயற்சிக்கின்றனர்.
திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது கூட்டரங்கிற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டார். அப்போதையை அரசு செயலாளர் பணீந்திர ரெட்டி கையெப்பமிட்ட ஆணையின் பேரில், எம்.ஜி.ஆர் நகர்மன்றக் கூடம் என பெயர் பலகையும் வைக்கப்பட்டது. அரசு ஒப்புதலுடன் வைக்கப்பட்ட பெயரை மாற்றி தற்போது கருணாநிதி பெயரைச் சூட்ட பார்ப்பது கேலிக்கூத்தானது. எனவே பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்... இல்லையெனில் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.