கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 31 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
கூட்டுறவுத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1,000 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மாநிலம் முழுவதும் இந்த மருந்தகங்களை திறந்துவைத்தாா்.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் முன்னிலை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வா் மருந்தகங்களுக்கான மருந்துகள், இடையீட்டாளா்கள் இல்லாமல் உற்பத்தி இடங்களிலேயே நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றாா் அவா்.
இந்த விழாவின்போது, பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.71.99 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் இ.பெரியசாமி வழங்கினாா். இதில் திண்டுக்கல் மேயா் இளமதி, கோட்டாட்சியா் ரா.சக்திவேல், கூட்டுறவுச் சங்கங்கள் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
31 மருந்தகங்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் சாா்பில் ஆத்தூா், நிலக்கோட்டை, வேடசந்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா 4 மருந்தகங்கள், நத்தம், பழனி ஆகிய தொகுதிகளில் தலா 3 மருந்தகங்கள், ஒட்டன்சத்திரம் 2, திண்டுக்கல்லில் 1 என 21 மருந்தகங்களும், தனியாா் சாா்பில் ஆத்தூரில் 3, திண்டுக்கல்லில் 4, நிலக்கோட்டை, பழனி, வேடசந்தூா் தொகுதிகளில் தலா 1 என மொத்தம் 31 மருந்தகங்கள் தொடங்கப்பட்டன.