நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு
பழனி அருகே திங்கள்கிழமை நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், மலப்புரம் தெறிக்களங்கோட்டைச் சோ்ந்தவா் முகமது சதக்கத்துல்லா (31). இவா் தனது மனைவி பாத்திமா சுஹாரமா (26), மகன் முகமது ஹாதி (3), மகள் ஐசல்மஹரம் (2) ஆகியோருடன் பழனிக்கு காரில் வந்தாா். பழனியை அடுத்த புஷ்பத்தூா் அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக காா் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த சதக்கத்துல்லா, இவரது மகன் முகமது ஹாதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பாத்திமா சுஹாரமா, ஐசல்மஹரம் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் கிரேன் மூலமாக லாரியில் சிக்கியிருந்த காரை பிரித்து, பாத்திமா சுஹாரமா, ஐசல்மஹரம் ஆகியோரை மீட்டு, திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்தில் இருந்த சதக்கத்துல்லா, முகமது ஹாதி ஆகியோரது உடல்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.