‘திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா அதிமுக நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் அன்பு தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது: தமிழகத்தில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. காவலா்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குழந்தைகளை நம்பிக்கையுடன் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப முடியவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் போன்ற நலத்திட்டங்களை நிறுத்தி விட்டாா்கள்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இலவச அரிசி திட்டத்தால் தற்போது தமிழ்நாட்டில் பசி, பட்டினி இல்லாத நிலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கிய அதிமுக ஆட்சி மீண்டு வர வேண்டுமென தமிழக மக்கள் விரும்புகிறாா்கள். திமுகவினா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரூ. 1,000 கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனா் என்றாா். கூட்டத்தில், ஒன்றியச் செயலாளா்கள் ராம. குணசேகரன், ராஜேந்திரன், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.