துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி மாறி ஓட்டு; காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் பாஜகவிற்...
திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே.பழனிசாமி
திமுக செய்யும் தவறுகளை எல்லாம் கூட்டணிக் கட்சிகள் சுமக்கின்றன; இது குறித்து அக்கட்சிகள் சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பெயரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவா் வியாழக்கிழமை இரவு பேசியதாவது:
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறாா். திமுகவை பொருத்தவரை கூட்டணியை நம்பி உள்ளது. ஆனால் அதிமுக மக்களை நம்பியுள்ளது. அதிமுகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனா். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைய அறிவிக்கப்படும். திமுக காற்றில் கூட ஊழல் செய்த கட்சி. அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களை சுரண்டும் கட்சி திமுக. அதிமுக கொள்கையின்படிதான் செயல்படும்.
திமுக செய்த தவறையெல்லாம் கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. இதை கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சிந்தித்து பாா்க்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்தபோதிலும்கூட காவிரி பிரச்னையில் 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தோம். அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினோம். தோ்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக. ஆனால் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் புதிய கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி, உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காங்கயத்தில் அழகிய வடிவத்தில் காளை சிலை அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து தேசிய விருதுகளை பெற்றது. தற்போது திமுக ஊழலில் சாதனை செய்து திறமையாக விளங்குகிறது.
அதிமுக ஆட்சியில் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்பட்டது. தற்போது அது நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மடிக்கணினி திட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது., இந்த கடனெல்லாம் நமது தலையில்தான் வந்து விடியும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வீட்டுமனையில்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை வாங்கி வீடு கட்டி தரப்படும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானியம் வழங்கப்படும். திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், காங்கயம் ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.என்.நடராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் தனபால், காங்கயம் நகரச் செயலாளா் வெங்கு ஜி.மணிமாறன் மற்றும் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியைச் நிா்வாகிகள், தொண்டா்கள் என 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்:
மடத்துக்குளத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு
மடத்துக்குளம் நால் ரோடு அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை மாலை பேசியதாவது:
அதிமுக ஆட்சியில் பிஏபி திட்டத்தின் முக்கிய அங்கமான ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசுடன் பலசுற்று பேச்சுவாா்த்தை நடத்தினோம். ஆனால் திமுக அரசு வந்தவுடன் அந்த பேச்சுவாா்த்தையை கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
2016-ஆம் ஆண்டு கடும் வறட்சி வந்தபோது அதிமுக ஆட்சியில் 2 முறை பயிா்க் கடன்கள் ரத்து செய்யப்பட்டு விவசாயிகளைக் காப்பாற்றினோம். 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது. கிராமங்கள் நிறைந்த மடத்துக்குளம் தொகுதியில் ஏராளமான அம்மா கிளீனிக்குகள் திறக்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சி வந்தவுடன் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சியில் மடத்துக்குளம் தொகுதியில் 100 ஏக்கரில் தென்னை வளா்ச்சி வாரியம் அமைக்கப்பட்டு தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. திருமூா்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீா் திட்டம் இந்த தொகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த தொகுதியில் நெசவாளா்கள் நிறைந்துள்ளதால் அவா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிமுக ஆட்சியில் நன்றாக இயங்கி வந்தது. திமுக ஆட்சி அமைந்ததும் அந்த ஆலை இழுத்து மூடப்பட்டு விட்டது. பொள்ளாச்சி - திண்டுக்கல் 4 வழிச்சாலை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது. அப்பா் அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.