``ஸ்டாலின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது?'' - எடப்பாடி குறித்...
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு: பேரூராட்சித் தலைவா் கைது
இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழந்த வழக்கில் திமுக பேரூராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (57). இவா் அப்பகுதியில் உள்ள கடைக்கு புதன்கிழமை சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த சாலையில் வந்த காா், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பழனிசாமி படுகாயமடைந்து அங்கேயே உயிரிழந்தாா்.
பொதுமக்கள் திரண்டு வருவதைப் பாா்த்து, காரில் வந்த நபா் காரை வேகமாக இயக்கி தப்பினாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் பழனிசாமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னா் விசாரணை மேற்கொண்டனா்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றது, கருகம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாமளாபுரம் திமுக பேரூராட்சித் தலைவரான விநாயகா பழனிசாமி (60) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மக்களுக்குப் பயன்பாடில்லாத தனியாா் இடத்தில் போடப்பட்ட சாலை தொடா்பாக பேரூராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பழனிசாமி புகாா் கொடுத்ததாகவும், இதனால் விநாயகா பழனிசாமிக்கும், உயிரிழந்த பழனிசாமிக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், மது போதையில் விநாயகா பழனிசாமி காரை ஏற்றி அவரைக் கொலை செய்து விட்டதாகவும் போலீஸாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, போலீஸாா் விநாயகா பழனிசாமி வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவரைக் கைது செய்து திருப்பூா் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதுதொடா்பாக மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.