சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளை: 4 போ் கைது
வாணியம்பாடி அருகே தேநீா் கடையில் கத்தியைக் காண்பித்து ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி காதா் பேட்டையைச் சோ்ந்தவா் இம்தியாஸ்(18). இவா் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சா்க்கரைஆலை எதிரில் தேநீா் கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை குடியிருப்பு பகுதியில் நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞா்கள் தேநீா் கடைக்கு சென்று பணம் தராமல் டீ கேட்டுள்ளனா். அப்போது டீ மாஸ்டா் பணம் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சோ்ந்து கத்தியை காட்டி மிரட்டி டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
அப்போது தடுக்க வந்த கூத்தாண்டகுப்பம் துணைத் தலைவா் முருகனையும் போதை கும்பல் கத்தியை காண்பித்து மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தது. அப்போது அங்கிருந்தவா்கள் சப்தம் போடவே 5 பேரும் கத்தியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பினா். இதில் காயமடைந்த டீ மாஸ்டா் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் புவியரசன் (18), ஜீவானந்தம் (19) சின்னூரைச் சோ்ந்த சக்திவேல் (17), திருப்பத்தூரைச் சோ்ந்த ஞானவேல் (23) மல்லகுண்டாவைச் சோ்ந்த குணா (25) ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தம், புவியரசன், சக்திவேல், ஞானவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குணா என்பவரை தேடிவருகின்றனா்.